கோயம்புத்தூர்: கோவையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டியும், பொதுமக்கள் நலமாக இருக்க வேண்டியும் தொண்டாமுத்தூர் அருகே உள்ள வேடப்பட்டி ஊர் பொதுமக்கள் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் பொதுவாகவே மழை வேண்டியும், மக்கள் நலனுக்காவும் கழுதை திருமணம், வேம்பு மரத்திற்கும், அரசமரத்திற்கும் திருமணம், கன்னித் திருமணம் போன்ற நூதன திருமணம் நடத்தி வைத்தால் மழை பொழியும் என்றும் ஐதீகம். அந்த வகையில், கோவையில் உள்ள வேடப்பட்டியில் தவளைக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திருமணத்தில் ஆண் தவளைக்கு மாப்பிள்ளை போல் வேடமணிந்து, குரும்பபாளையம் வீதிகள் வழியாக மாப்பிள்ளை ஊர்வலம் மேளதாளம் முழங்க நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, குரும்பபாளையம் ஊர் கவுண்டர் வீட்டில் பெண் தவளைக்கு சீர்வரிசைப் பொருட்கள் கொடுக்கப்பட்டு, பெண் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் குரும்பபாளையத்தில் உள்ள விநாயகர் கோயிலில் ஊர் பொதுமக்கள் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அப்பொழுது கூடி இருந்த பொதுமக்கள் அரிசியைத் தூவி தவளைகளை வாழ்த்தினர். பின்னர் மஞ்சள் நீர் தொட்டியில் தவளைகள் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து, மீண்டும் ஊரைச் சுற்றி வந்து தவளைகள் குடும்பம் நடத்துவதற்காக கிணற்றில் விடப்பட்டது.
தற்போது இந்த நிகழ்ச்சி சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வைக் காண ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். இதற்காக அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று உணவு சேகரித்து, அதை முனியப்பன் கோயிலில் படைத்து, 3 கன்னிப் பெண்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன் மழை வேண்டி குரும்ப்பாளையம் ஊரில் உள்ள துரை வீரசாமி கோயிலில் கிடா வெட்டி படையல் வைத்து பூஜை நடைபெறும். இரவு, சாலையில் பொதுமக்கள் அமர்ந்து படையல் சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் மழை பெய்யும் என்பது ஐதீகமாக உள்ளது.
இதையும் படிங்க: "ஆ.ராசா ஒரு மிகப்பெரிய ஊழல்வாதி" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்!