உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசின் உரிய அனுமதி பெறாத அனைத்து குடிநீர் ஆலைகளும் சீல் வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு திடீரென குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டதால், விற்பனையாளர்கள் மட்டுமல்லாமல், மக்களும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
கோவையில் 52 குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன. அதில் 47 ஆலைகளுக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. கோடைக் காலத்தில் மக்களுக்கு மிக அத்தியாவசியமானதாக குடிநீர் உள்ளது. தற்போது கோடை சீசன் தொடங்கிய நிலையில், குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது மக்களிடையே பெரும் பரிதவிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் ஆலைகள் சீல் வைப்பு விவகாரத்தினால் தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் ஆலை உரிமையாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுகுறித்து பேசிய குடிநீர் விற்பனையாளர் பாபு,
கார்ப்பரேஷன் நீரானது பெரும்பாலும் தூய்மையாக இல்லாததால், மக்கள் அதிகமனோர் கேன் குடிநீரை நம்பி இருக்கின்றனர். கேன் குடிநீர் விற்பனை செய்யப்படாததால், ஒருநாளைக்கு மட்டும் சுமார் ஆயிரம் ரூபாய் முதல் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தவர், அரசும் நீதிமன்றமும் உடனடியாக இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் கோவையில் 20 ஆண்டுகளாக கேன் குடிநீர் விநியோகம் செய்து வரும் ஆலை உரிமையாளர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், 2014ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த ஆணையில் நான்கு வகையான பிரிவுகளின் கீழ் குடிநீர் விநியோக ஆலைகளைப் பிரித்துள்ளது. அதில்,
கேன் குடிநீர் எடுக்கப்படும் நிலத்தடி நீரானது மிகவும் அடியில் இருந்து பயன்படுத்துவதற்கு கிரிட்டிக்கல் என்றும், அதற்கும் மேல் மட்டம் இருக்கும் நீர் அளவை செமி கிரிட்டிக்கல் என்றும், தரத்திலும் எவ்வித பெரும் பாதிப்பிள்ளாத நீரை ஓஇ எனவும், மிகவும் சிறந்த தரமான தண்ணீர் சேஃப் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.
கோவையை பொறுத்தவரை அதிகமான ஆலைகள் ஓஇ பிரிவின் கீழ் அடங்குகிறது, ஏழு நிறுவனங்கள் மட்டும்தான் செமி கிரிட்டிக்கல் பிரிவில் இருக்கிறது. இருப்பினும் பெருவாரியான கேன் குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டதால், மக்களுக்கு செல்ல வேண்டிய போதிய அளவு குடிநீரை விநியோகிக்க முடியாமல் தடைப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக தெரிவித்தார்.
அப்பகுதியினருக்கு கார்ப்பரேஷன் குடிநீரானது வாரத்திற்கு ஒருமுறை மட்டும்தான் வருவதால், பெருவாரியான பொதுமக்கள் கேன் குடிநீரை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
கார்ப்பரேஷன் குடிநீரானது குழந்தைகளுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்துவதாக ஐயம் தெரிவிக்கும் பொதுமக்கள், கேன் குடிநீர் விவகாரத்தில் அரசு தலையிட்டு அவர்களின் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: பொது குடிநீர் குழாய்கள் அகற்றுவதைக் கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் தர்ணா