கோயம்புத்தூர்: அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓதிச்சாமி. இவர் கொங்கு இளைஞர் பேரவை மற்றும் விவசாயிகள் சங்கம் ஆகியவற்றில் நிர்வாகியாக இருந்துவருகிறார். அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிராக விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்திவருகிறார்.
அண்மையில் இவர், தொழிற்பேட்டை அமைப்பது குறித்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்தியான சுப்பிரமணியத்துக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சுப்பிரமணியம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து நேற்று (ஜனவரி 10) பெருந்துறை காவல் துறையினர் ஓதிச்சாமியை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதைக் கண்டித்து நேற்றிரவு அன்னூரில் ஓதிச்சாமியின் உறவினர்கள், கொங்கு இளைஞர் பேரவை அமைப்பினர், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 75 பேரை காவல் துறையினர் கைதுசெய்து பின்னர் விடுவித்தனர். விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஒதிச்சாமியையும் காவல் துறையினர் நள்ளிரவில் விடுவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Covid Spreads: 'இது செம அறிவிப்பால்ல இருக்கு' - டெல்லியில் அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம்