கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்ற வருகிறது. 5 தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னை சிஐடி நகரில் 2017ஆம் ஆண்டு வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்களில் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு பங்களாவில் இருந்து திருடப்பட்ட ஆவணங்கள் சிஐடி நகரில் வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .
சிஐடி நகரில் 5 முக்கிய தொழிதிபர்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றபட்டுள்ளன. அந்த தொழிலதிபர்களிடமும் தனித்தனியாக அழைத்து தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே செந்தில் பேப்பர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செந்தில் குமார், ஓசேன் ஸ்பிரே மற்றும் மகாலட்சுமி ஜுவல்லரி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் நவீன் பாலாஜி ஆகியோரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் லாஜிவோரா என்பவரிடம் இன்று (ஜூலை 13) விசாரணை நடத்தப்பட்டதாக மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தெரிவித்தார். இந்நிலையில் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சிலருக்கும் தனிப்படை காவல் துறையினர் சம்மன் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அவர்களிடமும் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கோடநாடு வழக்கு - ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த தொழிலதிபரிடம் விசாரணை