கோயம்புத்தூர்: கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி, மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றது. இதில் பாதுகாவலராக இருந்த ஓம் பகதூர் என்பவரைக் கொலை செய்து விட்டு, சில விலையுயர்ந்த பொருட்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 250 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வழக்கின் முக்கியகுற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூரில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம், விபத்து அல்ல என கனகராஜின் அண்ணன் தனபால் தெரிவித்தார்.
அடுத்தடுத்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கண்ணனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று (ஜூன் 28) முதல் நாளாக கண்ணனிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று (ஜூன் 29) இரண்டாவது நாளாக கோயம்புத்தூர் காவலர் பயிற்சி வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கே.பி.அன்பழகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு