கோயம்புத்தூர்: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்குள்ள பங்களாவுக்குள் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து, பங்களாவில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது.
இந்தக் கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக கனகராஜ், சயான் உள்ளிட்ட 11 பேரை காவல் துறையினர் சந்தேகித்தனர். அதில் கனகராஜ் சேலம் அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. அதிரடி திருப்பமாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கடந்த மாதம் 25ஆம் தேதி கைது செய்தனர்.
இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் தனபாலின் கார் ஓட்டுநர் காவக்குமரனுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்தநிலையில் இன்று (நவ.24) கோவை பி.ஆர்.எஸ் காவலர் மைதான வளாகத்தில் காவக்குமரன் நேரில் ஆஜரானார். அவரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: சசிகலா விவகாரம் - அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மோதல்?