முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று கோவை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது கோவை தொகுதியில் பரப்புரை செய்வதற்கு வந்த அத்வானியைக் கொலை செய்யும் நோக்கத்தோடு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்றது.
அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டும். டெல்லியில் தற்போது நடைபெற்ற தேர்தலில் 2015ஆம் ஆண்டு தேர்தலில் இருந்ததை விட, பாஜக ஐந்து இடங்கள் அதிகம் பெற்றுள்ளது. மேலும் பிரதமர் மோடியின் மீது டெல்லி மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலில் இலவசங்களை அறிவித்தே அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றுள்ளார். மேலும் நடிகர் விஜய்க்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை.
இந்துத்துவம் என்பதை தமிழர்கள் அனைவரும் கடைபிடித்துக் கொண்டுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முக்கியப்புள்ளிக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்