கோவை மாவட்டம், எலச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது பக்கத்து வீட்டுக்காரர் பொன்னுச்சாமி. இருவரும் கடந்த ஆறாம் தேதி இரவு எலச்சிபாளையம் கிராமத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த அதிமுக பிரமுகர் நந்தகோபால், அவரது கூட்டாளிகள் இருவரையும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஜெகநாதன், பொன்னுசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
ஜெகநாதன் குடும்பத்தினருக்கும் அதிமுக பிரமுகர் நந்தகோபால் குடும்பத்தினருக்கும் நிலத்தகராறு இருந்து வந்த நிலையில், இருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் தாக்குதலில் ஈடுபட்ட முன்னாள் கவுன்சிலர் நந்தகோபால், அவரது கூட்டாளிகள் மீது கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இந்தப் புகாரின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று நந்தகோபாலை கைது செய்யக் கோரி எலச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தகுந்த இடைவெளியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, அவர்களிடம் கருமத்தம்பட்டி சரக துணை கண்காணிப்பாளர் பாலமுருகன், காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் நந்தகோபால், அவரது கூட்டாளிகளை கைது செய்யும் வரை காவல் நிலையத்தை விட்டு செல்லப் போவதில்லை எனக் கூறி பொதுமக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கு மேலாக முற்றுகைப் போராட்டம் நடைபெற்ற நிலையில், நந்தகோபாலை விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க : 'வேறு மாநிலங்களில் குடிபெயர்ந்த தங்கள் மாநிலத்தவர்களை மீட்க முனைப்புக் காட்டப்படவில்லை'