கோயம்புத்தூர்: சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டம் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த சிவகங்கை மக்களவைத்தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், 'திமுக தலைமையிலான அரசு 9 மாதங்களாகச் சிறப்பாகவும் வெளிப்படையாகவும், செயல்பட்டு வருகிறது. நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு என்பது சாப்பிடாமல் சாப்பாட்டை வர்ணிப்பதுபோல் உள்ளது. எனவே, நாளை அது தெரிந்துவிடும்.
உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பியுள்ள மாணவருக்குக் கல்வி கற்பதில் கண்டிப்பாகப் பாதிப்பு வரும். மருத்துவப் படிப்பில் பாதியிலிருந்து வந்திருக்கின்ற மாணவர்கள் மீண்டும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. அவர்களை இந்தியாவில் படிக்க வைக்க வாய்ப்பு இருக்கின்றதா எனப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் மாணவர்களைச் சேர்ப்பது கடினம் எனக் கூறியுள்ளனர். இந்தியாவில் இடமில்லை எனில் வேறு நாட்டில் படிக்க வைக்க முடியுமா என்பதை ஆராய வேண்டும்.
இந்தியாவுடன் ராஜாங்க உறவு உள்ள நாடுகளில் அவர்களை மீண்டும் மருத்துவம் படிக்க ஏற்பாடு செய்யலாம். நாடு திரும்பியுள்ள மருத்துவ மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும். கோவை மாணவர் ராணுவத்தில் சேர்ந்து இருப்பது அபாயகரமானது. உக்ரைன் வாதத்தை மட்டும் அனைவரும் கேட்கின்றனர். ரஷ்யாவின் வாதத்தைக் கேட்கவில்லை, ரஷ்யா போர் தொடுக்க சில காரணங்கள் உள்ளன. ரஷ்யா தரப்பு செய்திகள் வெளியிடப்படவில்லை.
கோவை மாணவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து இருப்பது போல் ஒரு இஸ்லாமிய மாணவர் ஆப்கானிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாட்டு ராணுவத்தில் சேர்ந்து இருந்தால் ஜிகாதிகள் எனக்கூறி இருப்பார்கள். உக்ரைன் வெள்ளைக்கார நாடு அவர்களுக்கு ஒரு பார்வை, இவர்களுக்கு ஒரு பார்வை பார்க்கக் கூடாது. மாணவர்கள் அவர்களுடன் சேர்ந்து போரிடுவது ஏற்றுக்கொள்ளமுடியாது.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை இல்லாமல் இரட்டைத்தலைமையில் இருப்பது செழிப்பாக இருக்காது. உக்ரைனில் உள்ள மாணவர்கள் மீட்புப்பணியில் வட இந்திய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக வந்த தகவல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இது குறித்து கடிதம் மூலம் அல்லது நேரில் கேட்போம்.
இந்திய அரசு பொருளாதாரத்தை நடத்த திறமை கிடையாது. லாபம் வரும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது தவறானது, இரு குடும்பங்களுக்கு மட்டுமே இந்திய நிறுவனங்கள் விற்கப்படுகின்றன. காங்கிரஸ் ஒரு சில இடங்களில் தேர்தலில் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். அதற்காக காங்கிரஸ் கட்சியில் தலைமை இல்லை, துணிச்சல் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்ககோரி உண்ணாவிரதப் போராட்டம்