கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி ஐ.வி.ஆர்.சி.எல் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. செங்கப்பள்ளி முதல் வாளையாறு வரையிலான இந்த சுங்கச்சாவடியின் துணை ஒப்பந்த நிறுவனமான பயர்வேஸ், கடந்த மூன்று ஆண்டுகளாக சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் தொகையை முறையாக வழங்க மறுத்து வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் சுங்கச்சாவடி நிர்வாகம் சம்பள உயர்வு கோரிக்கை குறித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தீபாவளி போனஸ் தொகையை உடனே வழங்க வேண்டும்.
பயர் வேஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு நேரடியாக சுங்கச்சாவடி நிர்வாகம் ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சுங்கச்சாவடியில் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் வாகனங்களை கட்டணம் இல்லாமல் செல்ல அனுமதிப்போம் எனவும் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏஐடியுசி நிர்வாகி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தீபாவளி போனஸ் 20% உயர்த்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 650 பேர் மீது வழக்குப்பதிவு!