காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (அக். 2) கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பல இடங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சின்னத்தடாகம் பகுதியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பல பிரச்னைகள் நடந்தேறியுள்ளது.கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்தின்போது முறைகேடாக செங்கல் சூளைக்கு மண் எடுப்பதை எதிர்த்து மக்கள் நீதி மய்யத்தினர் கேள்வி கேட்டதால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் அப்போது பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினரும் தாக்குபவரை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் என்றும் மக்கள் நீதி மய்யத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால், காவல்துறையினர் புகாரை ஏற்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே, கிராம சபைக் கூட்டத்தில் தாக்கப்பட்டவர்கள் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவடாகளை மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் நேரில் சென்று நலம் விசாரித்தார். இதனைத்தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.