கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஜுவல்லரியில் நேற்று கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த சுதீஷ்-ஷானி தம்பதியினர் நகை வாங்க வந்துள்ளனர்.
கடையில் பல்வேறு நகைகளை பார்த்த அவர்கள் நகை ஏதும் வாங்காமல், நாளை வந்து வாங்கி கொள்வதாகக் கூறி சென்றுள்ளனர்.
அவர்கள் சென்ற பின்னர் நகைகளை ஆய்வு செய்த போது நான்கு சவரன் எடைகொண்ட நகை காணாமல் போயிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக தம்பதியை கடை ஊழியர்கள் தேடியபோது, அவர்கள் அருகில் இருந்த கார் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்த கடை ஊழியர்கள் தம்பதியினரை காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலர்கள் தம்பதியிடம் சோதனையிட்ட போது, திருடப்பட்ட தங்க நகை ஆடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தங்க நகையினை பறிமுதல் செய்த காவல் துறையினர் தம்பதியினரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருடப்பட்ட தங்க நகையின் மதிப்பு ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இவர்கள் இருவரும் நகை கடைகளுக்கு டிப்டாப்பாக சென்று நகை மற்றும் பொருள்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது காவலர்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.