கோவை: கோவையில் கொங்கு நாடு மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கொங்கு ஈஸ்வரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த ஓராண்டு காலமாகவே பாஜக அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கட்சிப் பணிகளை செய்வதிலோ, கட்சியை வளர்ப்பதிலோ, பூத் கமிட்டி அமைப்பதிலோ யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஆனால், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை அங்கு ஆளுங்கட்சியாக உள்ளவர்களை குறிவைத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு அந்தந்த மாநிலத்திலேயே கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சியில் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள்.
மேற்கு வங்கம், பஞ்சாப், தெலங்கானா என பல மாநிலங்களில் பாஜகவின் இந்த செயல்பாடுகள், அடுத்த ஆண்டு தேர்தலை நோக்கி செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. அந்த மாநிலங்களில் எல்லாம் வழக்குகள், கைதுகள் என நடந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டிலும் அவ்வேலைகளை ஆரம்பித்துள்ளார்கள். எட்டு ஆண்டுகளுக்கு முன்னாள் போடப்பட்ட வழக்கு திடீரென வேகமெடுத்து இப்போது அதற்கான நடவடிக்கைகளை ஒரே நாளில் தீவிரத்தை காட்டி தமிழ்நாட்டில் உள்ள ஆளும் கட்சியை குறிவைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான், முறைப்படி அதனை செய்யும் போது யாரும் அதனை எதிர்க்கப்போவதில்லை. அதனை மீறுவது முற்றிலும் தவறான செயலாகும். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிப்பதிலோ, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலோ எந்த மாறுபட்ட கருத்தும் இருக்காது. ஆனால், நடத்தப்பட்ட முறைகள் அனைவரும் விரும்பத்தக்கதாக இல்லை.
இதுபோன்ற அடக்குமுறை விசாரணை நடவடிக்கைகளை அமலாக்கத்துறை தவிர்க்கலாம். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது அடுத்த ஆண்டு தேர்தலை நோக்கி அவர்கள் பயணிப்பதை உணர முடிகிறது. மேலும் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் தயாராவதற்கான அவசியம் உள்ளது. இப்படிப்பட்ட நடைமுறைகள் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்கு வாய்ப்புகள் இருக்கும். அப்படிப்பட்ட நிலைமையும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படும்.
யார் மீது வேண்டுமானாலும் வழக்கு இருக்கலாம், பொறுப்பில் இருப்பவர்கள் கண்டிப்பாக வழக்கு விசாரணைக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள், அப்படிப்பட்ட விசாரணைகளை சரியான முறையில் நடத்த வேண்டும். இது போன்ற நடவடிக்கையால் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான் என்னைப் போன்றவர்களின் வருத்தமாக உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது இவ்வளவு தீவிரமாக இருப்பதற்கான காரணம், கொங்கு மண்டலத்தில் அவர் பொறுப்பு எடுத்துக் கொண்ட பின்னால் இந்தப் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் முழுமையான வெற்றியை திமுக பெற்றுள்ளது. அதற்கு அவர் தான் காரணம் என்பதும் அனைவருக்கும் தெரியும். எனவே, அதனை நோக்கமாகக் கொண்டு பாஜக கொங்கு மண்டலத்தை குறிவைத்து இப்படிப்பட்ட விஷயங்களில் காய் நகர்த்துகிறார்களா என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்ப இயலாது - வானதி சீனிவாசன் அறிக்கை