விண்வெளியில் நடைபெறும் அனைத்து விதமான சம்பவங்களையும் இணையம் சார்ந்த செயல்பாடுகளை தெரிந்து கொள்ளும் வகையில் மாணவர்கள் கண்டுபிடித்த செயற்கைக் கோளின் கண்காணிப்பு நிலையம் கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று திறக்கப்பட்டது.
இதை இஸ்ரோ தலைவர் கே.சிவன் காணொலி மூலம் திறந்துவைத்தார். அப்போது, காணொலி வாயிலாக அவர் பேசுகையில், "சென்னை, கோவை, நாக்பூர் ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் தரைதளம் நிலைய தொடக்க விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் இந்த முயற்சி விண்வெளிச் சார்ந்த செயல்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாகும்.
இதில், பங்களிப்பு அளித்த அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். செயற்கைக்கோள் தயாரிப்பு நிலையம் என்பது நாட்டில் பெரும்பாலனவர்களின் கனவு. உள்நாட்டிலேயே செயற்கைக் கோள் தயாரிப்பு என்பது விலை குறைவு என்பதுடன் வணிகரீதியான பயனை அளிக்கும். தொடர்ந்து இது சம்பந்தமாக அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதியளிக்கிறேன். இஸ்ரோ 130 கோடி மக்களுக்கும் ஆனது என்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கல்லூரி முதல்வர் தங்கவேல், "கடந்த 10 ஆண்டுகளாக கல்லூரியில் பயின்ற மாணவர்களின் கனவாக கல்லூரி சார்பில் புதிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த வேண்டும் என்பது. இது குறித்த ஆராய்ச்சி பலகட்ட முயற்சியின் விளைவாக கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களின் கடின உழைப்பால் கல்லூரியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகையிலான "சக்தி சாட் PSLV/C-51" என்ற செயற்கைக் கோள் விண்ணில் செலுத்த உள்ளது.
இந்த செயற்கைகோள் அடுத்த மாதம் பிப்ரவரி 22ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது. இதனை இந்திய விஞ்ஞானி ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளின் உதவியுடன் ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் இணைய வழியிலிருந்து செலுத்த உள்ளோம். இந்தச் செயற்கைக் கோளானது விண்வெளியில் நடக்கின்ற அனைத்து விதமான இணையம் சார்ந்த விஷயங்களில் செயல்பாடுகளை தெரிவிக்கும் திறன் கொண்டது. மேலும் தரையில் செய்யக்கூடிய அனைத்து விதமான செயல்களையும் இந்த செயற்கைகோள் மூலம் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இஸ்ரோ தலைவர் திறந்துவைத்த செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையம்!