கோயம்புத்தூர்: ஈஷா யோகா மையம் சார்பில் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறமையை வெளிக் கொண்டு வரும் வகையில் ஆண்டுதோறும் ஈஷா கிராமோத்வசம் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டும் 15வது கிராமோத்சவம் போட்டிகள் கடந்த 3 மாதங்களாக நடந்து வந்தன. 5 மாநிலங்களில் நடந்து வந்த இந்த போட்டிகளில் 60 ஆயிரத்து 132 வீரர்கள் பங்கேற்றனர். இதன் நிறைவுவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் பங்கேற்றார்.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை, நடிகர் சந்தானம் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி என இரு பிரிவிலும் ஈரோடு அணி வெற்றிபெற்றது. வாலிபால் போட்டியில் சேலம் உத்தமசோழபுரம் அணி வெற்றி பெற்றது. த்ரோபால் போட்டியில் கோவை அணி வென்றது.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், "ஈஷா கிராமோத்சவம் திருவிழாவை 2004ஆம் ஆண்டு முதல் ஈஷா நடத்தி வருகிறது. இன்று நடக்கும் 15வது கிராமோத்சவ விழாவில் நான் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன். இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் முழு நேர, தொழில்முறை விளையாட்டு வீரர்கள் கிடையாது தினக்கூலி வேலைக்கு செல்பர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் என பல விதமான வேலை செய்பவர்கள் தான் இப்போட்டியில் வீரர்களாக களம் கண்டு வென்றுள்ளனர். இது தான் இத்திருவிழாவின் சிறப்பு.
விளையாட்டு போட்டிகள் மட்டுமின்றி இங்கு 1,200 பேர் ஒன்று சேர்ந்து கும்மியாட்டத்தையும் ஆடி காட்டியுள்ளனர். இது தவிர பல்வேறு கிராமிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இத்திருவிழாவில் நடத்தப்பட்டுள்ளது. இதைக்காண ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துள்ளீர்கள். இவை அனைத்தையும் சாத்தியப்படுத்தியுள்ள சத்குரு, வாழ்க்கையையே ஒரு விளையாட்டு தன்மையுடன் அணுக கூடிய கூல் குருவாக இருக்கிறார்.
விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைகளை வளர்க்கும் வித்தை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். இந்தாண்டு 1,000 இடங்களில் கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும், யோகா, கேலரி, மல்லர்கம்பம் உள்ளிட்ட 5 பாரம்பரிய கலைகளை கேலோ இந்தியா திட்டத்தில் சேர்த்துள்ளோம்.
பொருளாதார சக்தியாக இந்தியா உருவானது, சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது மற்றும் G20 இன் சமீபத்திய வெற்றி ஆகியவை கடந்த 9 ஆண்டுகளில் எட்டப்பட்ட வளர்ச்சிப் பாதையைக் காட்டுகின்றன. அருணாச்சலப் பிரதேசம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று கருதியதால், சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தவறவிட முடிவு செய்தேன்.
இதேபோல், பாரம்பரிய விளையாட்டான கபாடி போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கும் காலமும் கூடிய விரைவில் வரும். முன்னதாக ஆசிய விளையாட்டு போட்டிகள் துவங்கிய நிலையில் ஆசியன் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்காக உற்சாக குரலெழுப்புவோம் எனக்கூறி இந்தியா இந்தியா என்றார்.
அப்போது அங்கிருந்த பலரும் சேர்ந்து பாரத் பாரத் என குரலெழுப்ப ஜக்கி வாசுதேவிடம் ஏதோ சொல்லிவிட்டு அமைச்சரும் பாரத் பாரத் என குரலெழுப்பினார். இதைத்தொடர்ந்து பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ், "ஈஷா கிராமோத்சவம் திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதில் 25,000 கிராமங்களில் இருந்து சுமார் 60,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜாதி, மதம், ஆண், பெண், வயது என எல்லா வேறுபாடுகளையும் கடந்து ஒற்றுமையுடன் விளையாடி உள்ளனர். போட்டியிட்டு வெற்றி பெறும் நோக்கத்திற்காக நாம் இந்த கிராமோத்சவத்தை நடத்தவில்லை. இதன்மூலம், இதில் பங்கெடுத்த வீரர்கள் மற்றும் பார்வையிட்ட ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் உருவாக்க இந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி உள்ளோம்.
வாழ்க்கையில் விளையாட்டு தன்மை இல்லாமல் போனால், வாழ்க்கை பெரும் சுமையாகிவிடும். குறிப்பாக, ஏழ்மை நிலையில் இருக்கும் கிராமப்புற மக்களின் வாழ்க்கை ஆனந்தமாகவும், உற்சாகமாகவும் இருக்க ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்றவைகள் அவசியம்’ என்றார்.
இதையும் படிங்க:அண்ணாமலையை நீக்க வேண்டும்..! அதிமுக போட்ட கண்டிஷன்..! பாஜகவின் ரியாக்ஷன் என்ன..?