கோயம்புத்தூர்: சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை அருகே வாரப்பட்டி என்ற கிராமத்தில் புதிதாக மீனாட்சி இரும்பு உருக்காலை அமைய உள்ளதால் கருத்துகேட்பு கூட்டம் இன்று (நவ. 23) நடைபெற்றது.
கிராம மக்கள், ஊராட்சி மன்ற தலைவர், சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கோ தகவல் அளிக்காமல் ரகசியமாக கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இக்கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் புதிதாக அமைய உள்ள இரும்பு உருக்காலை குறித்தும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எவ்வாறு தடுப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் ஆலை நிர்வாகத்தினர் முழுமையான விளக்கத்தை அளிக்காமல் கண்துடைப்புக்காக ஒரு நிழற்படத்தை தயார் செய்து விளக்கமளித்ததாக மக்கள் குற்றம்சாட்டினர்.
பதிலளிகாமல் வெளியேறிய அலுவலர்
மேலும் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்த புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிடாமல் தமிழில் வெளியிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த மாவட்ட வருவாய் அலுவலர் சுதா நந்தினி இனிவரும் நாட்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு புத்தகம் தமிழில் வெளியிடப்படும் என தெரிவித்தார். இந்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டுமா என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.
அதே சமயம் கருத்து கேட்பு கூட்டம் முடிந்ததா இல்லையா என்பதை கூட அறிவிக்காமல் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து கொண்டிருந்தபோதே அதிகாரிகள் அரங்கில் இருந்து வெளியேறினார்.