கோயம்புத்தூர்: சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது. மதுரையில் நடைபெற்ற தடகளப் போட்டி அது. லாரி ஓட்டுநரின் மகளான அந்த பெண், வாழ்வின் சவால்களை ஓடிக் கடந்து விடும் நோக்குடன் களத்தில் தயாராக இருந்தார். சிக்னல் கிடைத்து ஓடத் துவங்கிய அவருக்கு கால்கள் ஒத்துழைத்த அளவுக்கு காலில் இருந்த ஷூக்கள் ஒத்துழைக்கவில்லை. பாதி தூரம் கடந்து இருந்த நிலையில் ஏற்கெனவே கிழிந்த நிலையில் இருந்த அந்த ஷூக்கள் முழுவதுமாக கிழிந்து கால்களை பதம் பார்த்தன.
ரத்தம் சொட்ட சொட்ட ஓடி அந்த போட்டியில் தங்கம் வென்றார் வித்யா ராமராஜன். சில ஆண்டுகள் கழித்து அதே கால்களால் தடைகளைத் தாண்டி இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷாவின் 39 ஆண்டு சாதனையை முறியடித்து இருக்கிறார் வித்யா ராமராஜன். மதுரை போட்டி முதல் சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டியை தொடுவது வரை அனைத்து சாதனைகளுமே இவருக்கு சாதாரணமாக வாய்த்துவிடவில்லை. ஆசிய போட்டிகளில் இரட்டை சகோதாரிகளான தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யா மற்றும் வித்யா பங்கேற்றுள்ளனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில், தோட்டத்தின் நடுவே தற்போதுதான் புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்றில் வசிக்கும் வித்யா மற்றும் நித்யாவின் பெற்றோரை சந்தித்தோம். பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசுப்பணி கிடைத்தாலும் அவங்க செலவுகள சமாளிக்குறதே சிரமம்தான். ஷூ வாங்கவே 25 ஆயிரம் ரூபா தேவைப்படும். இந்த ஷூ ஒரு மாசம் தான் தாங்கும். இதுபோக விமான பயண செலவு எல்லாமே சொந்த செலவுல தான் சமாளிச்சோம் என்கிறார் வித்யா மற்றும் நித்யாவின் தாயாரான மீனா.
இப்போது ஆசிய விளையாட்டுகளில் அரசின் உதவி கிடைப்பதால் செலவுகளை சமாளிக்க முடிவதாக கூறும் மீனா, தற்போதுதான் வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறியிருப்பதாக தெரிவித்தார். ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில், கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கோவையைச் சேர்ந்த வித்யா மற்றும் நித்யா இருவருக்கும் தடகள போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது.
இதில் தொடர் ஓட்டத்தில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற வித்யா, 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தையும் வென்று அசத்தி உள்ளார். அதே போட்டியில் வித்யாவின் சகோதரியான நித்தியா நான்காவதாக வந்து பதக்கம் பெறும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார்.
யார் இந்த சகோதரிகள்... ஆசிய விளையாட்டில் இவர்களின் சாதனை என்ன...?: பெண் பிள்ளைகளை பெற்றதாலோ என்னவோ ஊராரிடமும் சொந்தக்காரர்களிடமும் அவர்களின் கனவை நனவாக்குவதற்கு போராடியுள்ளனர் வித்யா, நித்யாவின் பெற்றோர். லாரி ஓட்டுநராக பணியாற்றிக் கொண்டே தன் மகள்களின் கனவையும் சுமந்துள்ளார் ராம்ராஜ்.
மூத்த மகளுக்கு திருமணமான நிலையில், தனது இரட்டை பெண் குழந்தைகளான வித்யா மற்றும் நித்தியா சிறு வயது முதலே தடகளப் போட்டிகளில் ஆர்வம் செலுத்தி வந்ததைக் கண்டு, இருவருக்கும் முறையாக பயிற்சி பெற ஏற்பாடு செய்து உள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் போது உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பரிசுகளை வென்று உள்ளனர் வித்யா மற்றும் நித்யா.
"அடிப்படையில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் அன்றாட செலவுகளுக்கே சிரமப்பட்டு வந்தோம். மூவரும் பெண் குழந்தைகள் என்பதால் என்ன செய்யப் போகிறார்களோ என அக்கம்பக்கத்தினர் காதுபடவே பேசினார்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது, எங்களது மகள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்களை வென்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் கலந்து கொண்டு, இருவரும் வெற்றி பெற்று வந்தனர். இயற்கையிலேயே அவர்களுக்கு தடகளப் போட்டிகளில் ஆர்வம் இருப்பதை உணர்ந்தோம். விளையாட்டு தான் எதிர்காலம் என்று முடிவு செய்தபோது, அவர்களின் விருப்பத்துக்கு தடை சொல்லாமல் ஊக்கப்படுத்தும் வேலையை மட்டும் செய்தோம்.
ஓட்டுநராக இருந்து அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சிரமம் என்ற நிலையிலும், என் மகள்களின் கனவிற்காக, வருமானத்தை அவர்களின் எதிர்காலத்திற்காக செலவு செய்தோம். ஆரம்ப காலக்கட்டத்தில் விளையாட்டுக்கான உபகரணங்களை வாங்கித் தருவதே கடும் சவாலாக இருந்தது.
நல்ல ஷூ கூட எங்களால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. என் மகளின் சகாக்கள், நல்ல ஷு -வுடன் பயிற்சி செய்வார்கள். ஆனால் எங்கள் குழந்தைகள் வீட்டின் நிலை அறிந்து கிழிந்து சேதமான ஷூ-க்களுடன் பயிற்சி செய்த காலங்களும் உண்டு" என வேதனையுடன் வித்யாவின் தந்தை கூறினார்.
"இது மட்டுமல்ல, மதுரையில் நடைபெற்ற தடகளப் போட்டி ஒன்றில் வித்யா கலந்து கொண்ட போது, ஒழுங்கான ஷூ இல்லாததால் காலில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும், காயத்தைப் பொருட்படுத்தாமல், காலில் ரத்தம் சொட்ட, தரை முழுவதும் ரத்தம் வடிந்த நிலையிலும் என் மகள் ஓடி, முதலிடம் பெற்றார்.
இருவரும் உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான தடகள போட்டிகளில் சாதித்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் மத்திய அரசு பணி கிடைத்தது. இதனால் பொருளாதார ரீதியாக என் மகள்கள் எங்களுக்கு ஓய்வு கொடுத்து உள்ளனர். மேலும் அவர்களின் செலவுகளையும், தேவைகளையும் ஓரளவிற்கு சமாளித்து வருகிறோம்.
ஆரம்ப நிலையில், என் மகள்கள் பங்கேற்கப் போகும் போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு போகக்கூட எங்களுக்கு சிரமமாக இருந்தது. நாளடைவில் அந்த நிலை மாறியுள்ளது. ஒடிசா, ஜார்கண்ட், ராஞ்சி, தாய்லாந்து போன்ற பல இடங்களில் பங்கேற்று என் இரு மகள்களும் பதக்கம் வென்று உள்ளனர்.
பெண் பிள்ளைகள் என்றால் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு திருமணம் தான் என்று கூறுவது உண்டு. ஆனால் என் மகள்கள், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை மட்டுமே வாழ்வின் லட்சியமாக வைத்துள்ளனர். அதற்காக இரவும் பகலும் அயராது உழைத்து வருகின்றனர். மகள்களின் சம்பாதியத்தில் வாழ்வதனால், கல்யாணம் பண்ணிக் கொடுக்கவில்லையா என்று காதுபட பேசிய ஏராளமான பேச்சுகளுக்கு எங்கள் மகள்கள், அவர்களது சாதனைகளை கொண்டு பதிலளித்து உள்ளனர்.
ஆசிய போட்டியில் நூலிழையில் நித்தியா பதக்கத்தை தவறவிட்டது வருத்தம் தான் என்றாலும் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வெல்வார்கள் என உறுதியாக நம்புகிறோம். ஊர் பொதுமக்கள் எங்களது மகள்களின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஊர் முழுவதும் பேனர் வைத்துள்ளனர்.
இதுவே எங்கள் மகள்களின் வெற்றி. அவர்களின் திறமைக்கு கிடைத்த மதிப்பு. இருவரையும் மேளதாளங்களுடன் வரவேற்பதற்காக ஊர் பொதுமக்கள் காத்திருப்பது, பெருமையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது" என வித்யா மற்றும் நித்யா கடந்து வந்த பாதையை கண்களில் கண்ணீர் துளிகளுடன் தந்தை மற்றும் தாய் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஏழ்மை என்று தன் மீது எறியப்பட்ட முட்களை ஒன்று திரட்டி, அதனை வாழ்வின் லட்சியங்களை அடைய பயன்படுத்தி, இன்று ஒட்டுமொத்த ஆசிய நாடுகளையும் திரும்பி பார்க்கச் செய்துள்ள சகோதரிகளின் கதை, பின்வரும் பல லட்சக்கணக்கான குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் நிகரில்லா ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு 2 பதக்கம்! ஆடவர் குழு போட்டியிலும் அசத்தும் இந்திய வீரர்கள்!