வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லம், அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 10) ஒரேநாளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.
இந்தத் தகவலை அறிந்த வேலுமணியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரது சுகுணாபுரம் இல்லத்தின் முன்பு குவிந்து, ஆளும் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது வேலுமணியின் ஆதரவாளர்கள் சிலர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த தடுப்புகளைத் (பேரிகார்டு) தூக்கி எறிந்தனர்.
500 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையின்போது முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், கிணத்துக்கடவு தாமோதரன், பி.ஆர்.ஜி. அருண்குமார், சூலூர் கந்தசாமி, வால்பாறை அமுல் கந்தசாமி, ஜெயராமன், ஏ.கே. செல்வராஜ், எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகிய 10 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மூவர் உள்பட 500 பேர் கூடினர்.
அவர்கள் மீது அனுமதியின்றி கூடி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், அரசு ஊழியரின் உத்தரவை மீறுதல், நோய்த்தொற்று பரவும் விதத்தில் செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல திருமலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு, சரவணன் ஆகிய இருவர் மீது தனியே நோய்த்தொற்று பரவும் விதத்தில் செயல்படுதல் உள்பட இரண்டு பிரிவுகளின்கீழ் தனியே வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், பேரிகார்டுகளைத் தூக்கி எறிந்து, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக 10 பேர் மீது மூன்று பிரிவுகளின்கீழ் தனி வழக்காகப் பதிவுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: முன்கூட்டியே கசிந்ததா ரெய்டு... ஆக. 9 இரவில் வேலுமணி எங்கே?