கோயம்புத்தூர்: தொழில் துறை அமைச்சகம், சர்வதேச வர்த்தக இயக்குநரகம் இணைந்து ஏற்றுமதியாளர்கள் சங்கமம் என்ற கண்காட்சியை நடத்தினர்.
இதனை கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இக்கண்காட்சியில் வர்த்தகம், ஏற்றுமதி சார்ந்த பல்வேறு அரசு, தனியார் நிறுவனங்கள், பல கருத்தரங்குகளை அமைத்திருந்தன.
கருத்தரங்கம்
இக்கண்காட்சியினைப் பார்வையிட்ட பி.ஆர். நடராஜன், வர்த்தகம் மற்றும் தொழில் துறை ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், தொழில் துறையினர் சந்திக்கும் சவால்கள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து கண்காட்சி வளாகத்தில், ஏற்றுமதியாளர் சங்கமம் என்ற தலைப்பில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய அவர், “தொழில் துறையில் கோயம்புத்தூர் மாவட்டம் தேசிய அளவில் முக்கியப் பங்காற்றிவருகிறது. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைகின்றனர். பொறியியல் சார்ந்த நிறுவனங்கள் மட்டுமின்றி, பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் கோயம்புத்தூரில் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன.
தென்னை நார்ப் பொருள்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் ஒன்றிய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 9 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு