கோவை: காந்திபுரம் பகுதியில் எல்லன் மருத்துவமனையை நடத்தி வருபவர் ராமசந்திரன். இவரிடம் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் உமாசங்கர், சென்னை மருத்துவமனை கிளையை கோவையில் தொடங்கவிருப்பதாகவும், அதற்காக எல்லன் மருத்துவமனைக் கட்டிடத்தை வாடகைக்கு கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து, மாதம் 15 லட்சம் ரூபாய் வாடகை பேசப்பட்டு, ஆண்டுதோறும் 10 விழுக்காடு வாடகை உயர்வு செய்து கொள்வதாக கடந்த 2017ஆம் ஆண்டு 10ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும், ஒரு கோடி ரூபாயை முன்பணமாக மருத்துவர் உமாசங்கர் கொடுத்துள்ளார்.
ஆனால், உமாசங்கர் பேசியபடி வாடகை கொடுக்காமல் மூன்று ஆண்டுகள் இழுத்தடித்து வந்த நிலையில், வாடகையாக தரவேண்டிய 4 கோடியே 95 லட்சத்து 77 ஆயிரம் ரூபாயை ராமச்சந்திரன் சில தினங்களுக்கு முன்பு உமாசங்கரிடம் கேட்டுள்ளார்.
ஆனால், உமா சங்கர் வாடகை தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனையை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விடுவதற்கு உமாசங்கர் முயற்சித்துள்ளார்.
இதுகுறித்து ராமச்சந்திரன் உமாசங்கரிடம் கேட்டபோது, உமாசங்கர், மருத்துவமனை மேலாளர் மருதவாணன் ஆகியோர் ராமச்சந்திரனை மிரட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக, ராமச்சந்திரன் கோவை மாநகர குற்றப்பிரிவில் தன்னை ஏமாற்றி தனது 100 கோடி ரூபாய் சொத்துகளை உமாசங்கர் அபகரிக்க முயல்வதாகவும், உணாசங்கரும், மருதவாணனும் கொலை மிரட்டல் விடுவதாகவும் புகார் அளித்துள்ளார்.
மேலும், தனக்கு வரவேண்டிய வாடகை பாக்கியை பெற்றுத்தர வேண்டும் என்றும் அந்தப்புகாரில் கூறியுள்ளார்.
இந்தப்புகாரைத் தொடர்ந்து மருத்துவர் உமாசங்கர், மருத்துவமனை மேலாளர் மருதவாணன் ஆகிய இருவர் மீதும் கொலை மிரட்டல், மோசடிப் பிரிவுகளில் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர். மருத்துவர் உமாசங்கர் தற்போது அவிநாசி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: நட்சத்திர ஹோட்டலில் அஜய் வாண்டையாரை வெளுத்தெடுத்த கும்பல் - பரபரப்பு சிசிடிவி காட்சி !