கரோனா வைரஸ் காரணமாக கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால், பல்வேறு இடங்களிலிருந்து பணியாற்ற வந்தவர்கள் அந்தந்த பகுதிகளிலேயே தங்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் ஆங்காங்கே சிக்கல்கள் நீடிக்கின்றன.
இதனைப் போக்கும் விதமாக கோவை மாவட்டம் கணியூர் ஊராட்சிக்குட்பட்ட ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் உள்ளூர் மக்கள் நியாய விலைக் கடைகளில் வாங்கும் ரேஷன் பொருட்களை அவர்களின் தேவைக்குப் போக மீதமுள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை பெற்று அவர்கள் கிராமத்தில் தங்கி உள்ள வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இது குறித்து கிராம இளைஞர்கள் கூறுகையில், “விசைத்தறி கூடங்கள் அதிகமாக நிறைந்த பகுதி என்பதால் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் இங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். கரோனா வைரஸ் காரணமாக திடீரென 144 தடை உத்தரவு போடப்பட்டதால் அவர்களால் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியவில்லை. அதனால் இங்கே தங்கியுள்ளதால் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களைக் கொடுப்பதற்காக, ரேஷன் கடைகளில் வாங்கி அவர்களுக்கு கொடுத்துள்ளோம்” என்றனர்.
இதையும் படிங்க...கேரள செவிலியர்களுக்கு தலை வணங்குகிறேன்!