கோவை: கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணி புரிந்து வருபவர், முருகன். இவரது நண்பர் பிரதீஷ் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் டிவி-களை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர். அந்த டிவிகள் சில நாட்களிலேயே பழுதடைந்துள்ளன.
இதனிடையே கடந்த 20ஆம் தேதி சூலூர் பகுதியில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச்சேர்ந்த இளைஞர் தசீம் என்பவர் டிவிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளார். அதைப் பார்த்த சூலூர் காவல் நிலைய காவலர் முருகன், இவர்களும் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் என நினைத்து தசீமை பிடித்து விசாரித்துள்ளார். அதில் தசீம் தனது நண்பர்களுடன் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் தங்கியிருப்பதும், வட மாநிலத்திலிருந்து டிவிகளை கொண்டு வந்து, வீதி வீதியாக சென்று விற்பனை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவலர் முருகன், தன்னை ஏமாற்றியவர் வடமாநில இளைஞர் தசீமுடன் இருக்கலாம் என நினைத்து, தசீமை காரில் வரதராஜபுரத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். தனது நண்பர் பிரதீஷையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வரதராஜபுரத்தில் உள்ள தசீமின் அறைக்குச்சென்று, அவரை தாக்கி விசாரித்துள்ளனர். தன்னை ஏமாற்றிய நபர் தசீமுடன் இல்லை எனத் தெரிந்தபோதும், அறையில் இருந்த 5 டிவிகள், கேஸ் ஸ்டவ் மற்றும் 47 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை காவலர் முருகேசன் தனது நண்பருடன் சேர்ந்து பறித்துச்சென்றார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட வட மாநில இளைஞர் தசீம், சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கொலை மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, காவலர் முருகன், அவரது நண்பரான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.