கோயம்புத்தூர்: மணிப்பூர் மாநிலத்தில் குகி- மெய்த்தி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை கலவரமாக மாறியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில், பெரும்பான்மையாக உள்ள மெய்த்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என தெரிவித்ததற்கு, பழங்குடிகளாக உள்ள குகி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு தற்போது பெரும் கலவரமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த இரண்டு மாதங்களாக அங்கு நடைபெற்று வரும் கலவரத்தில் மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு இடங்கள் தீக்கிரையாகி உள்ளது. அங்கு வாழும் மக்கள் பலரும் இந்த மோதல் காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு மக்கள் தங்கள் குடும்பங்களை பிரிந்து இடம் பெயர்ந்துள்ளனர். இதனால் தற்போது அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தை காட்சிபடுத்தியும், ஒன்றிய அரசு உடனடியாக கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோயம்புத்தூர் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் பாஜக தலைமையிலான மோடி அரசு தான் என குற்றம் சாட்டி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் டாடாபாத் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன பதாகைகளை ஏந்தியும், காயம் அடைந்தவர்களைப் போல் தங்களை சித்தரித்துக் கொண்டும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், மணிப்பூரில் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற பழங்குடி இன மக்களை முற்றிலுமாக அழித்து பெரும்பான்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயர்சாதி சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்தை வழங்குவதாக மோடி தலைமையிலான பாஜக அரசு அறிவித்தது. பழங்குடியின மக்களுக்கு எதிராக அறிவித்ததன் விளைவு என மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. இது மிகவும் வருத்தமுற்ற செயலாகும்.
மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக தங்கள் மாநிலம் மற்றும் பிற மாநிலங்களுக்குள் ஓடி ஒளிந்து வாழக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். மணிப்பூரில் திரும்பும் இடங்கள் எல்லாம் பிணக் குவியல்களாக உள்ள நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைப் பற்றி எல்லாம் பெரிதும் கவலைப்படாமல் பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப் பயணம் சென்று அமைதியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.
இது கண்டிக்கத்தக்கது. இந்நிலையில் மணிப்பூர் மக்களுக்கு ஆதரவு கொடுக்கின்ற வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மணிப்பூர் கலவரத்தை நிறுத்தி பழங்குடியினர் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட மோடி அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரியும் சகோதரரும் ஒரே நாளில் மரணம்