கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குள்பட்ட ஒன்பதாவது வார்டு அறிவொளி நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு நகராட்சி சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது ஈக்கள் மொய்த்து, துர்நாற்றம் வீசும் நிலையில் சுகாதாரமற்று இருந்த குப்பை அள்ளும் வாகனத்தின் மூலம் கபசுரக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து நகராட்சி ஒப்பந்த ஊழியர்களை வாகனத்துடன் சிறைப்பிடித்து, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த நகராட்சி ஊழியர்கள், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். இது குறித்து பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நகராட்சி அலுவலர்கள் அலட்சியமாகவும் பதில் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல், வருவாய்த் துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட நகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தை பொதுமக்கள் விடுவித்தனர்.
இதையும் படிங்க: அளவுக்கு அதிகமாக அலர்ஜி மாத்திரைகள் உட்கொண்ட பெண் உயிரிழப்பு!