கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே உள்ள கப்பளாங்கரை கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாலட்சுமி அம்மன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் இக்கோயிலில் இரண்டு அம்மன் ஐம்பொன் சிலைகளும், இரண்டு பெருமாள் ஐம்பொன் சிலைகளும் உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயிலை பூட்டிவிட்டு பூசாரி சுப்ரமணியம் சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறந்தபோது அம்மன் தலையில் இருந்த வெள்ளி கிரீடம், வெள்ளி ஒட்டியானம், தங்கதாலி மற்றும் கோயிலில் வைக்கப்பட்டிருந்த நான்கு ஐம்பொன் சிலைகளும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்பக்க ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சிலைகள், நகைகளையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பின்னர் கிராம மக்கள் கொடுத்த தகவலையடுத்து அங்கு விரைந்த நெகமம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிலைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
சமீபகாலமாக பழமை வாய்ந்த கோயில்களில் உள்ள ஐம்பொன் சிலைகளை நோட்டமிட்டு திருடுவதை ஒரு கும்பல் வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனவே கிராம மக்கள் கொள்ளையடிக்கப்பட்ட அம்மன் சிலைகள் மற்றும் நகைகளை உடனடியாக மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.