கோவை: மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில், 38வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழகம் அரங்கில் நடைபெற்றது. இதில் 2021-22 மற்றும் 2022-23ம் கல்வி ஆண்டில் PhD, MPhil, கலை அறிவியல், சமூக அறிவியல், அறிவியல் பாடப்பிரிவு, கல்வியியல் பாடப்பிரிவு முடித்த மொத்தம் 93,036 பேர் பட்டம் பெற்றனர். கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டம் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி,இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால், உட்பட பல்கலைக்கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியும் முனைவர் பட்டம் பெற்றார்.
சிறுவயது முதல் இசையமைப்பில் ஆர்வம் கொண்ட ஆதி மீயூசிக் ஆல்பங்களுக்கு இசையமைத்து வந்தார். கிளப்புல மப்புல, வாடி புள்ள வாடி உள்ளிட்ட ஆல்பங்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்தார். இவரது பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமைடைந்தது.
இதன்மூலம் பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கிய ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் இன்று நேற்று நாளை, தனி ஒருவன், கதகளி, துருவா, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
பின்னர் 2017ஆம் ஆண்டு மீசைய முறுக்கு என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ‘டக்கரு டக்கரு என்ற ஹிப்ஹாப் ஆதி இசையமைத்த பாடல் இன்டர்நெட்டில் மிகவும் பிரபலமடைந்தது. பின்னர் நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு, வீரன் ஆகிய படங்களில் நடித்தார்.
இந்நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஹிப்ஹாப் ஆதி செய்தியாளர்களுக்கு பேசுகையில் ”இசை தொடர்பாக ஐந்தாண்டு ஆராய்ச்சி செய்து வந்தேன் இப்போது அது நிறைவு பெற்று இருக்கிறது. முனைவர் பட்டம் வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வேறு வேலை பார்த்துக்கொண்டே படிப்பது கடினமாக இருந்தது.
அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் புதிய படம் வரும். ஆளுநரிடம் பட்டம் வாங்குவது குறித்த கேள்விக்கு, முனைவர் பட்டத்தை கவர்னரிடம் தான் வாங்க வேண்டும். அதற்கு வேறு மாற்று இல்லை என பதிலளித்தார். சந்திராயன் 3 இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதமாக இருக்கின்றது. மியூசிக் அகாடமி ஆரமிக்கும் எண்ணம் இருக்கிறது அதற்கு முன்னோட்டமாகவே முனைவர் படிப்பு முடித்து இருக்கிறேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈஷா மையம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் கபடி போட்டிகள்!