கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சித்தாபுதூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ப. சிதம்பரம் தலைமை வகித்தார். இதில் பேசிய அவர், "தற்போதைய மோடியின் ஆட்சியில் தொழில், விவசாயம், பொருளாதாரம் என அனைத்து துறைகளும் சரிவை சந்தித்துள்ளன. இந்த அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை சுனாமி நீளத்தைவிட அதிகமாக உள்ளது" என்றார்.
மேலும் காங்கிரஸ் கட்சி சரக்கு மற்றும் சேவை வரியை எதிர்க்கவில்லை என்றும் ஆனால் அதை விதித்த அரசின் மீது பிழை உள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். கோவை உள்பட நாடு முழுவதும் உள்ள சிறு, குறு தொழில்கள் முடங்கி கிடப்பதற்கு சரக்கு மற்றும் சேவை வரி மட்டுமே காரணம் என்று கூறிய அவர், நாட்டில் 45 ஆண்டுகளாக இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் தற்பொழுது தலைவிரித்தாடுவதாக வேதனை தெரிவித்தார்.
இதனால் மூன்று கோடி பேருக்கும் மேல் வேலையிழந்து நிற்பதாகவும், அதில் மென்பொருள் துறையில் மட்டுமே 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையின்றி இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மத்திய அரசானது முத்தலாக் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் விவகாரம் போன்ற பல்வேறு சட்டங்களை கொண்டுவந்து இஸ்லாமிய மக்களை மிகவும் துன்புறுத்துகின்றது.
அண்டை நாடுகளிலிருந்து வாழ்வாதாரத்திற்காக இந்தியாவிற்கு குடிபெயரும் மக்களில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்று மோடி, அமித் ஷா கூறியது எவ்வகையில் நியாயம். இது மதரீதியாக பெரும் பிரச்சனையை கொண்டுவந்து சேர்க்கும்" என்றார்.
மேலும் அவர், இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் அனைத்து இளைஞர்கள், மாணவர்களுக்கு தலை வணங்குவதாகப் பெருமிதத்துடன் கூறினார்.