கோவை மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு அதே பகுதியை சார்ந்த ரம்யா என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தினால் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இதனால் தொடர்ந்து இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்படவே மூர்த்தியை பிரிந்து ரம்யா குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தர்மராஜன் என்பவருடன் ரம்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் கோத்தகிரியில் இருந்து குழந்தைகளுடன் புறப்பட்டு வந்து பொள்ளாச்சி அருகில் உள்ள மெட்டுவாவி கிராமத்திலுள்ள ஒரு தோட்டத்தில் தங்கி, வேலை செய்து வந்தனர். இந்நிலையில் ரம்யா இருதய கோளாறு காரணமாக சில நாள்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தோட்ட உரிமையாளர் தனது தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது தர்மராஜன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து நெகமம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தர்மராஜன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தர்மராஜன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கின் தீர்ப்பு