கோயம்புத்தூர்: கணபதி அடுத்த காந்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்கிற லவேந்திரன்(49). இவரது மனைவி கவிதா (32). கவிதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி மகன் உள்ள நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குமாரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
குமார் கட்டிட பணி செய்து வருகிறார். கவிதா வீட்டு அருகிலுள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார். கவிதா செல்போனில் நண்பர்களுடன் பேசி வந்த காரணத்தினால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சண்டையிட்டு கவிதா அவரது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று (ஜுன் 21) மாலை வீடு திரும்பிய கவிதாவிற்கும் குமாருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் குமார் கவிதாவை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கவிதா உயிரிழந்தார். குமார் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கவிதாவின் உறவுமுறை தம்பியான சௌந்தரராஜன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மாணவிக்குப் பாலியல் தொல்லை: முன்னாள் ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ!