கோயம்புத்தூர்: ஆனைகட்டி சாலையில் உள்ள நாட்டு மருந்து கடையில் பாதுகாக்கப்பட்ட விலங்கினங்கள் பட்டியலில் உள்ள புலியின் தோல் விற்பனைக்காக ஒருவர் வைத்துள்ளதாக கோயம்புத்தூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில், கோயம்புத்தூர் வனச்சரகர் அருண்குமார் தலைமையில் வனவர்கள் ரங்கராஜ், அருண்சிங், உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் கோயில்மேடு பகுதியில் உள்ள சின்னதம்பிராஜ் என்பவருடைய வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த புலித்தோல் ஒன்றை பறிமுதல் செய்தனர். மேலும், நாட்டு வைத்தியரான இவரது மருந்து கடையில் சந்தேகத்தின் பேரில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இரண்டு மண்ணுளி பாம்புகள், மான் கொம்பு ஒன்றும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். அதில் ஒரு பாம்பு உயிரிழந்த நிலையில் இருந்துள்ளது. பின்னர் நாட்டு வத்தியர் சின்னத்தம்பி ராஜை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வன அலுவலர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் சின்னத்தம்பிராஜ் நாட்டு வைத்தியராக பணியாற்றி வருவதும் இவர் அப்பகுதியில் நாட்டு மருந்து கடை வைத்துக்கொண்டு மண்ணுளி பாம்பு மூலம் மருந்துகள் தயாரித்து விற்க முயன்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த வனத்துறையினர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,"சின்னதம்பிராஜ் வீட்டில் கைப்பற்றப்பட்ட புலித்தோல் உண்மையானதா அல்லது வேறு ஏதேனும் மிருகத்தின் தோலை புலித்தோல் போன்று மாற்றியுள்ளாரா எனக் கண்டறிய அந்த தோலை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி உள்ளதாகவும், அதன் முடிவில் உண்மையான புலித்தோலா? அல்லது வேறு ஏதாவது விலங்கின் தோலா? எனத் தெரியவரும் என்றனர்.
அது போல் பொதுமக்களிடையே மண்ணுளி பாம்பு குறித்து தவறான கருத்துக்கள் நிலவுவதால் அதனை மருந்துக்காகவும் ராசிக்காகவும் வாங்குவதாக தகவல்கள் கிடைக்கிறது. எனவே இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் மண்ணுளி பாம்பில் எந்த ஒரு அரிய வகை மருத்துவ குணமும் அல்லது ராசியும் கிடையாது தவறான தகவல்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம். அதுபோல் சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பை வாங்கவும் வேண்டாம்" என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல், சமீபத்தில் ஈரோட்டில் சத்தியமங்கலம் அடுத்த அரசூர் என்ற கிராமத்தில் சிலர் கூரை அமைத்து தங்கி வந்துள்ளனர். இவர்களின் செயல் சந்தேகம் எழுப்பும் படியாக இருந்தது. இதனைக் கண்காணித்து வந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் ஆய்வு செய்ததில் கூடாரம் அமைத்து புலித்தோலை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. உடனடியாக அந்த 4 நபர்களை நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது; என்ஐஏ விசாரிக்க முடிவு!