வேகமாக வளர்ந்து இந்த நவீன காலத்தில் மாறாமல் இருப்பது விவசாயம் மட்டுமே. உணவின் முக்கியம் அறிந்து விவசாயத்திற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், போதிய மழை பெய்யாததாலும், விவசாயத்திற்கான இடுபொருட்கள் தட்டுப்பாடு, உரங்கள் விலை உயர்வு, விவசாயத்திற்கான கூலியாட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஆங்காங்கே விவசாயத்தை கைவிடும் சூழல் ஏற்பட்டு தான் வருகிறது. எனினும், இதனை சமாளித்து விவசாயம் என்பது பரவலாக செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நரசிபுரம் கிராமத்தில் சொட்டு நீர்ப் பாசன முறையைப் பயன்படுத்தி அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் இங்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கப்பட்டு ஆண்டு முழுவதும் விவசாயம் நடைபெற்று வருகிறது.
முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் ஆறுகளிலும், ஓடைகளிலும் தண்ணீர் வரத்து இருந்ததால் முப்போகம் விளைவித்த விவசாயிகள், பருவமழை பொய்த்ததன் காரணமாக விவசாயத்தை கைவிடும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டதன்பேரில், அனைவரும் சொட்டு நீர்ப் பாசனம் முறைக்கு மாறி உள்ளதால், தற்போது அந்தப் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் என்பது செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் கூறுகையில், 'பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் சூழலில் தற்போது சொட்டு நீர்ப் பாசனம் விவசாயிகளுக்கு நன்கு கை கொடுத்துள்ளது. தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகள் அருகிலுள்ள கேரள மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சொட்டு நீர்ப் பாசன முறையில் கத்தரி, வெண்டை, மஞ்சள், வெங்காயம், கொத்தமல்லி, முட்டைக்கோஸ், தக்காளி உள்ளிட்ட பல வகையான காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. இதன் காரணமாக தங்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கிறது' எனத் தெரிவித்தார்.
சொட்டு நீர்ப் பாசன முறை குறித்து இளைய தலைமுறை விவசாயி கலைச்செல்வன் கூறுகையில்,' தந்தை காலம் முதல் விவசாயம் செய்து வருகிறோம். முன்பெல்லாம் உரிய காலத்தில் மழை கிடைத்ததால் ஆறுகளிலும் ஓடைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. அந்த நீரை சேமித்து வைத்து விவசாயம் நடைபெற்று வந்தது.
தற்போது பருவமழை பொய்த்ததால் ஆறுகளும் ஓடைகளும் வறண்டு போய் உள்ளன. இதன் காரணமாக விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் விவசாயிகள் ஒன்றிணைந்து சொட்டு நீர்ப் பாசன முறையைப் பயன்படுத்தி, தற்போது குறைந்த நீரில் விவசாயம் செய்து வருகிறோம்.
இந்தப் பாசன முறையில் எளிதாக செடிகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியும். களைச் செடிகள் அதிகமாக வளர்வது இல்லை. இதனால் கூலி ஆட்கள் பிரச்னை ஏற்படுவதில்லை. முன்பு வாய்க்கால் வெட்டி நீர்ப் பாய்ச்சி வந்த நிலையில், சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவதால், நேரம் குறைவதால் வெளியிடங்களுக்கு எளிதாக சென்று வர முடியும். மேலும் குறைந்த நீர் இருந்தால் மட்டும் போதும். அனைத்து விதமான காய்கறிகளையும் விளைவிக்க முடியும்' என நிரூபித்துக்காட்டி உள்ளதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மண்ணை மலடாக்கி கிடைக்கும் அதிக மகசூல் ஸ்லோ பாய்சனுக்கு சமம்' - ஈரோடு இயற்கை விவசாயி!