கோயம்புத்தூர்: 2024ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவில் லேசர் ஷோ மற்றும் ட்ரோன் ஷோ ஆகியவை கோவையில் உள்ள வாலாங்குளத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியைக் காண சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வாலாங்குளத்தில் குவிந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சாலையில் தங்கள் வாகனங்களுடன் திரண்டதால் கடும் போக்குவரத்து நிலவியது.
மேலும் வாலாங்குளத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு வரும் சாலையில் பொதுமக்கள் கூட்டமாக திரண்டதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசாரும் திணறினா். தொடர்ந்து இரவு 2 மணி வரை இந்த போக்குவரத்து நெரிசல் இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையும் படிங்க: 2023-இல் கோவையை உலுக்கிய 10 முக்கிய சம்பவங்கள்!
இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களும், அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை அழைத்து வர வெளியேறிய ஆம்புலன்ஸ் வாகனங்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. காவலர்கள் பணியில் இருந்தும் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் நீண்ட நேரம் நிலவியது. அப்போது நோயாளிகளுடன் சிக்கித்தவித்த ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்களே வழி ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதேபோல, கோவை நகரத்தின் முக்கிய சாலைகளில் இரவு 12 மணி அளவில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. அப்போது மது அருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டி வந்தவர்களிடம் சாலை விபத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் புறநகர் பகுதியான நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிகளில் மேஜிக் ஷோ, பேஷன் ஷோ, விளையாட்டுப் போட்டிகள், ஆட்டம் பாட்டம் என புத்தாண்டு கொண்டாட்டம் கலை கட்டியுள்ளது.
இதில் சிறியவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளின் திரையிசை பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் மேஜிக் கலைஞர்களின் கண்கவர் மேஜிக் ஷோ பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: சென்னையில் களைகட்டிய '2024' புத்தாண்டு கொண்டாட்டம்!