கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், " தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு வார காலமாக குறைந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கோவையில் அதிகரித்து வந்த தொற்று, குறைந்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நேற்றை விட இன்று 800 குறைவாக உள்ளது. அனுமதிக்கப்படாத ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருவதே கோவையில் பாதிப்பு அதிகரிக்கக் காரணம். அனுமதி இல்லாமல் இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்படும்.
கரோனா நோயாளிகள் ஆட்டோக்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதால் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ளது போல கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை கோவையில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 கார் ஆம்புலன்ஸ்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தக் காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பணிபுரியும் நபர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் 10 நாட்களுக்கு கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.