கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வுமேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கோவை அரசு மருத்துவக்கல்லூரி டீன் அசோகன் உள்பட மருத்துவத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைளை எடுத்துவருகின்றன. கரோனா வைரஸ் கைகளின் மூலமாகவும், இருமல் அல்லது தும்மல் மூலமாகவும் பரவுகிறது.
எனவே, கைகளை தினமும் 15 முறையாவது கழுவ வேண்டும், கைவைக்கக்கூடிய இடங்களைச் சுத்தமாக வைக்க வேண்டும், முதியவர்களும், ஒன்று அல்லது இரண்டு வயது குழந்தைகளும் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
விரைவில் தமிழ்நாட்டிலும் சிறப்பு மருத்துவ பரிசோதனை வசதிகள் அமைக்கப்படவுள்ளன. கரோனா வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கிடையாது என்பது பொய்யான தகவல். முறையான மருத்துவச் சிகிச்சையின் மூலம் கரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சீனாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 78 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 28 நாள்களுக்கு வீடுகளில் வைத்து கண்காணிக்கப்படுவார்கள். சளி, காய்ச்சல், இருமல்தான் அறிகுறிகள், எனவே அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
சமூக வலைதளங்களில் இந்த கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்பப்படுகின்றது. கேரளாவில் கரோனா வைரஸ் பரவவில்லை, சீனாவிலிருந்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவருக்கு பரவியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் எபோலா, நிபா போன்ற வைரஸ் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது அதுபோல இந்த வைரஸ் பரவலையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கைகுலுக்குவதற்குப் பதிலாகப் பாரம்பரிய முறையில் கைகூப்பி வணக்கம் சொல்லலாம், இதனால் நோய்பரவுவது குறையும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்காத தனியார் பேருந்து ஜப்தி