கோவை மக்களவைத் தொகுதிக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட அதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின் பேசிய அக்கட்சியின் துணைத் தலைவரும், கோவை மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான மகேந்திரன், ”தொழில்துறை, ஜிஎஸ்டி, சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாடு, திறன் மேம்பாடு, விமான நிலைய மேம்பாடு உட்பட 24 அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், ”குறிப்பிட்ட காலத்தில் திட்டங்கள் செயல்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம். சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது. ஆனால், அந்த சிஸ்டத்தை நாம்தான் கெடுத்தோம். களைய வேண்டியதை தூக்கிப்போட்டு விட்டால் அனைத்தும் சரியாகிவிடும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும். அதனால் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை கொடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். பிரதமர் தேர்வு இந்த முறை வித்தியாசமாக இருக்கும் என கூறிய கமல் அதற்கு காரணமாக மக்கள் நீதி மய்யமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மூன்றாவது அணிக்கான வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வாய்ப்புக்காக கெஞ்சாமல் மூன்றாவது அணியை நாமே ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.