கோவை: சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள், விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆறுமுகம், ஹாஜி அப்துல் ஹமீது, மாதவன், சுலைமான், ராஜேந்திரன், தீன் இப்ராஹிம்ஷா ஆகிய தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேரிடம் இருந்து ஏழு கிலோ 908 கிராம் தங்கத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி ஆடைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. ஆறு பேரிடமும் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்களும், விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. தங்க கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரும் கடலூர், விழுப்புரம், வேலூர், ராமநாதபுரம், திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.