தனியார் பள்ளிகளைப் போல் அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விஜயதசமியை முன்னிட்டு ஏராளமான பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்களின் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க வருவார்கள்.
இதனால், அனைத்து அரசு ஆரம்பப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பள்ளியைத் திறந்துவைத்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், கோவையைப் பொறுத்தவரை அரசு ஆரம்பப் பள்ளிகள் ஏதும் திறக்கப்படாததால் அரசுப் பள்ளிகளில் மழலையர் சேர்க்கைக்கு வந்த பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், ‘விஜயதசமி தினமான இன்று எங்களது குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க வந்தோம். ஆனால் பள்ளிகள் திறக்காததால் மற்றொரு நாளில் சேர்க்க உள்ளோம். இன்று பள்ளிகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்திருந்ததால் பள்ளிக்கு வந்தோம். ஆனால், பள்ளிகள் திறக்காமல் இருப்பது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது’ என்று கூறினர்.