கோவை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கோவையில் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கோவைக்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஆக.17) செய்தியாளர்களை சந்தித்த அவர்,” கரோனா மூன்றாம் அலை வருவதாக கூறப்படும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தடுப்பு மருந்து இருப்பு குறித்து தெளிவான பதிலை ஒன்றிய அரசு தெரிவிக்கவில்லை. தடுப்பூசிகளை அதிகமாக உற்பத்தி செய்வதற்கு செங்கல்பட்டு, குன்னூர் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி தயாரிக்க ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் அனுமதி கேட்டுள்ளார்.
பெட்ரோலிய பொருள்களுக்கு விதிக்கப்பட்ட வரி
பெட்ரோலிய பொருள்களுக்கு ஒன்றிய அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது. பெட்ரோலிய பொருள்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வரிகளால் 2020-21 ஆம் ஆண்டு 3.71 லட்சம் கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது. இதுவரை 15.6 லட்சம் கோடி ரூபாய் வரி விதிப்பு மூலம் பெறப்பட்டு உள்ளது. பெட்ரோலிய பொருள்கள் மீது போடப்பட்ட வரியை குறைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க முடியும்.
காபூல் விவகாரம்
முக்கிய பிரமுகர்கள். பத்திரிகையாளர்கள். நீதித் துறையை சேர்ந்தவர்கள் போன்ற பலரும் பெகாசஸ் செயலி மூலம் வேவு பார்க்கப்பட்டு உள்ளனர். கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இவ்விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்த இருக்கிறோம். ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் இருந்து எத்தனை இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர் என்ற தகவல் அரசிடம் இல்லை.
பிரிவினை பயங்கரவாத நாள்
காபூலில் இந்தியர்களை காக்க ஒன்றிய அரசு தவறி விட்டதாகவே தெரிகிறது. அங்கிருந்து இந்தியர்களை அழைத்து வர ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆகஸ்ட் 14ஆம் தேதி பாஜக அரசு பிரிவினை பயங்கரவாத நாள் என அறிவித்துள்ளது.
1938 ஆம் ஆண்டு சாவர்க்கர் இரண்டு தனி நாடாக வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.1940க்கு பின்புதான் ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்தார்.முதலில் பிரிவினைவாத கருத்தினை தொடங்கியது சாவர்க்கர்தான்.
126 இடங்களில் 26 மாநிலங்களில் பாஜக யாத்திரை நடத்துகிறது. இது கரோனா தொற்று பரவ காரணமாக அமையும். இந்நிகழ்வு கரோனா மூன்றாம் அலை பரவ வழிவகுக்கும்” என யெச்சூரி தெரிவித்தார்.
இதையும் படிங்க : போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது