கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், திருடப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்றை வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காரமடை காவல்துறையினர் ஆறுமுகம் என்பவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் கெண்டையூர் சாலையில் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டபோது, அந்த வழியே வந்த ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் சரவணக்குமார் என்பவரையும் பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் காரமடை காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட கொம்பனூரில் ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு சந்திரசேகரன் என்பவரின் வீட்டினுள் அருவாள், இரும்பு கம்பியுடன் புகுந்து, தனியாக இருந்த அவரது மனைவி அனிதாவின் தலையில் தாக்கியது மட்டுமல்லாமல், அவர் அணிந்திருந்த 9¼ பவுன் தங்க நகைகளை அருவாளை காட்டி கொள்ளையடித்து, அதை கோயமுத்தூரில் விற்றது குறித்தும்,
அதே போல் ஆகஸ்ட் 27ஆம் தேதி சிறுமுகை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சிட்டேபாளையத்தில் முஸ்தபா என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் குடோனை உடைத்து, பர்னிச்சர்களை கொள்ளையடித்து, அப்பொருள்களை மேட்டுப்பாளையத்தில் அவருக்கு தெரிந்தவரின் தோட்டத்து வீட்டில் பதுக்கி வைத்துள்ளது குறித்தும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.
அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சரவணக்குமார் (40), காரமடை யைச் சேர்ந்த ஆறுமுகம் (54), வடமங்கலக்கரையைச் சேர்ந்த ரவீந்திரன் (25), குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், காந்தி நகரைச் சேர்ந்த பிரேம்குமார், மூர்த்தி, சின்ன சரவணன் ஆகியோரையும் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட சரவணன் என்கிற சரவணக்குமார் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைதானவர்களிடமிருந்து நகை, அருவாள், இரும்பு கம்பி ஆகியவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகராஜ் என்பவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் கைது