அரசு பள்ளிகளைத் தவிர்த்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும், மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் குழந்தைகளைச் சேர்ப்பதை அவர்களின் அறிவுச் செழுமையை அதிகரிக்கும் என பெரும்பாலான பெற்றோரிடம் ஒரு பொதுப்புத்தி பதிய வைக்கப்பட்டிருந்தது. அதனை சுக்குநூறாக நொறுக்கிவருகிறது கரோனா நெருக்கடி காலம்.
எப்படியெனில்...
முதலாவது அரசுப் பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளைப் போல் மேம்பட்டுவருகிறது. இரண்டாவது, வருமானம் இழந்த பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்கள் அரசு பள்ளிகளை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. கரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்னும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தனியார் பள்ளிகள் பள்ளிக் கட்டணத்தை முழுமையாக வசூலிக்கின்றன.
இதனால் ஏற்படும் நெருக்கடி அரசுப் பள்ளிகளின் மீதான கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனைக் காலத்திற்கேற்றார் போல பயன்படுத்தி இந்தக் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்கியிருக்கிறது கோவை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி.
சமூக வலைதளங்கள் மூலம் பள்ளியின் வசதிகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து, அதன் மூலம் மாணவர் சேர்க்கையில் களமிறங்கிருக்கும் இந்தப் பள்ளி 40 ஆண்டுகளுக்கும் மேலாக சொக்கம்பாளையம் என்ற கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி
கோவை மாவட்டம், அன்னூர் அருகே அமைந்துள்ள சொக்கம்பாளையத்தில் கடந்த 1934ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் சுதந்திர போராட்டம் குறித்து பொது மக்களிடையே உரையாற்ற வந்தார்.
அதன் நினைவாக இப்பள்ளிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் பயின்ற ஏராளமானோர் பல்வேறு அரசு துறைகளில் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 1977ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, கடந்த 1987ஆம் ஆண்டு மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்குக் கல்வி பயின்று உயர் கல்விக்குச் செல்கின்றனர்.
குறிப்பாக, கடந்த ஆண்டு 530 மாணவர்கள் கல்வி பயின்று அதில் 90 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். காந்திஜி அரசு பள்ளியில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
என்னென்ன வசதிகள்?
வெளியூரில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்காக இலவசமாக ஐந்து விடுதிகள், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், இயற்கை மீது ஆர்வம் வருவிக்கும் விதமாக கீரைத் தோட்டம், உடல் ஆரோக்கியம் மேம்படும் விதமாக உடற்கல்விக்கு முக்கியத்துவம் உள்ளிட்டவை இந்தப் பள்ளியின் மிகச் சிறப்பான வசதிகளில் ஒன்று.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் உடற்கல்வி பாடப்பிரிவு நேரத்திலும் கூட வகுப்புகள் நடைபெறும். ஆனால், காந்திஜி அரசுப் பள்ளியில் அப்படியல்ல, மாணவர்களின் உடல் மற்றும் மனநலம் பேணுதலுக்கே முன்னுரிமை.
”இது போன்ற வசதிகள் மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர, மாணவிகளின் தன்னம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் மேம்படுத்தும் தற்காப்பு கலைகளில் ஒன்றான கராத்தே கற்றுக் கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு போட்டிகளில் மாவட்ட, மாநில அளவில் எங்கள் பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்கள் வெற்றி பெற்று வருகின்றனர். மொழி ஆய்வகம் மூலம் ஆங்கிலம் கற்பது எளிதாவதுடன் தமிழ் இலக்கியங்களில் தரம் உயர்கிறது” என்கிறார் பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார்.
இது மட்டுமல்லாது இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் ஒவ்வொரு மாணவர்களின் கல்வித் தரத்தையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இது தவிர, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கரோனா காலத்திலும் கல்வி தடை படாமல் இருக்க இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.
ஆகா..! இவ்வளவு வசதிகளா? என யோசிக்க வைக்கும் இந்தப் பள்ளி குறித்து கோவை தவிர பிற மாவட்ட மாணவர்களுக்கும் தெரியப்படுத்தவே இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு வாட்ஸ்-அப், பேஸ்புக் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான தமிழ் வழி, ஆங்கில வழி, சேர்க்கை தொடங்கி தற்போது நடைபெற்றுவருகிறது. இப்படி, சமூக வலைதளங்கள் மூலமாக பள்ளி குறித்து விளம்பரம் செய்துள்ளதால் மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் சேர்க்கையும் அதிகரித்துள்ளதாக மன நிறைவுடன் தெரிவிக்கிறார் செந்தில்குமார்.
”என்னுடைய தந்தை சுதந்திரப் போராட்டத் தியாகியாக இருந்த காலத்தில் காந்தியடிகள் சுதந்திர உரையாற்ற இப்பகுதிக்கு வந்ததன் நினைவாக காந்திஜி பெயரில் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்திலேயே காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு தரமான சத்தான காய்கறிகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
ஐந்து விடுதிகளிலும் உள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். நல்ல உணவு, நல்ல கல்வி கொடுக்கப்படுவதால் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது” என்றார் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருவேங்கடம்.
கரோனா நெருக்கடியிலும் கூட பள்ளிக் கட்டணத்தை கறாராக வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு நடுவே அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து வருவது ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்துகிறது.
இது காலத்தின் தேவை என்பதை உணர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் காந்திஜி மேல்நிலைப் பள்ளியின் சேவை, மகாத்மா காந்தியில் இந்த மேற்கோளோடு பொருந்திப் போகிறது.
"உண்மையான கல்வி என்பது தனிமனிதனின் மனதில் பண்பு, ஞானம், பொறுமை, உண்மை ஆகியவற்றை விதைப்பதில் அடங்கியிருக்கிறது”
இதையும் படிங்க:அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது