கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றினார். அப்போது, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த செல்வி என்பவரிடம் 60ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.
கடன் கொடுத்தபோது மூர்த்தியின் வங்கிப் புத்தகம், ஏடிஎம் கார்டை செல்வி வாங்கிவைத்துக் கொண்டார். இதன்பின்னர் வட்டிப் பணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக மாதம்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வீதம் செல்வி எடுத்து வந்தார். தற்போது, ஊரடங்கு காரணமாக மூர்த்தி வேலையில்லாமல் இருந்ததால் வங்கியில் பணம் செலுத்த இயலாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், வங்கியில் பணம் இல்லாத காரணத்தினால் மூர்த்தியிடம் நேரில் சென்று பணத்தை வாங்கி வர ரமேஷ் என்பவரை மூர்த்தியின் வீட்டிற்கு இரு நாட்களுக்கு முன்பு செல்வி அனுப்பியுள்ளார். அந்த நபர், மூர்த்தியின் மனைவியிடம் பாலியல் ரீதியாக பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த மூர்த்தி, செல்வியிடம் மூன்றுநாட்கள் கழித்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இந்தச்சூழ்நிலையில், நேற்று மாலை செல்வி, ரமேஷ் உள்ளிட்ட நான்கு பேர் மூர்த்தியின் வீட்டிற்கு வந்து மூர்த்தியை தாக்கியுள்ளனர். இதனால், மூர்த்தியின் கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த நான்குபேரும் மூர்த்தியை தாக்கும் போது சாதிரீதியாக கடுமையாகப் பேசி இருப்பதாகவும் தெரிகிறது.
காயமடைந்த மூர்த்தியை அவரது மனைவி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும், தனது கணவரை சாதிரீதியாக கொச்சைப்படுத்தி தாக்கிய செல்வி, ரமேஷ் உள்ளிட்ட நான்குபேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வடமாநில பெண்ணை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது!