கோவை: கருமத்தம்பட்டி, செந்தில்நகர் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. கணவரை இழந்த இவர், தனது இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நிர்மலா கருமத்தம்பட்டியில் உள்ள தாயார் வீட்டில் இரவு நேரத்தில் குழந்தைகளுடன் தங்குவது வழக்கம்.
நேற்று இரவு வழக்கம் போல் தாயார் வீட்டிற்கு நிர்மலா குழந்தைகளுடன் சென்ற நிலையில், அவரது வீட்டில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் ஒன்று சேர்ந்து திருடர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பி விட்ட நிலையில், மற்றொருவரை மடக்கிப் பிடித்தனர். மேலும், வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் திருடர்கள் இருவரும் முகமூடி எதுவும் போடாமால் சர்வ சாதாரணமாகக் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

திருடிய முன்னாள் காவலர்
இந்நிலையில் கருமத்தம்பட்டி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிடிபட்ட திருடன் முன்னாள் காவலர் முனீஸ்வரன் என்பதும் , கோவை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி திருட்டு வழக்கு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்ட முனீஸ்வரனை கைது செய்த காவல் துறையினர், அவனுடன் வந்த மற்றொருவரை தேடி வருகின்றனர்.
பல திருட்டு வழக்குகள்
கைதான முன்னாள் காவலர் முனீஸ்வரன் மீது ஏற்கனவே, இரண்டு செயின் பறிப்பு வழக்குகள், ஒரு மொபைல் திருட்டு வழக்கு, இரு சக்கர வாகன திருட்டு வழக்குகள் உள்ளன.
பொதுமக்களைக் கண்டித்த காவல்துறை
திருடன் பிடிபட்ட நிலையில், அவனை வேகமாக அழைத்து செல்வதிலேயே காவல்துறையினர் வேகம் காட்டினர். இந்நிலையில், பிடிபட்ட திருடனை ஒன்றுமே சொல்லாமல் காவல் துறையினர் அழைத்து சென்றதால், பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், பொது மக்களை எச்சரித்த காவல்துறையினர், பிடிபட்டவரை அழைத்துச் சென்றனர்.
காவல் துறையிடம் பிடிபட்டவுடன், முனீஸ்வரன் காவல்துறையினரிடம் ஏதோ சொல்வதும் , அதன் பின்னர் காவல்துறையினர், பொது மக்களை சமாதானப்படுத்தியதாக அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு வெளியூர் செல்பவர்களின் கவனத்திற்கு - சைலேந்திரபாபு என்ன கூறினார் தெரியுமா?