கோவை மாவட்டம், வால்பாறை சட்டப்பேரவைத்தொகுதி உறுப்பினராக இருந்தவர், கோவை தங்கம். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உருவானபோது அதில் இணைந்து பணியாற்றினார்.
வால்பாறை சட்டப்பேரவைத்தொகுதி உறுப்பினராக 2001 மற்றும் 2006ஆகிய இரு சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வால்பாறை தொகுதியில் இரு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர், கோவை தங்கம். சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வால்பாறை மக்களின் நம்பிக்கைக்குரிய நபராக வலம் வந்தவர்.
கடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் த.மா.கா சார்பில் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால், அக்கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார். 73 வயதான அவர் கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் சாய்பாபா காலனியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். கோவை தங்கத்தின் உடலுக்கு அப்பகுதி மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை கோவை தங்கத்தின் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 5 லட்சம் பேருக்கு அடிப்படைக் கல்வி வழங்கப்படும்...! - அமைச்சர் அன்பில் மகேஷ்