அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 2018ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் கோவை லாலிரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று அதிகாலையில் சென்ற காவல் துறையினர், அவரைக் கைது செய்து சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதிமுக பெயரில் போலி இணையதளம் தொடங்கி ஆட்களைத் தேர்ந்தெடுத்தகாக, சூலூர் முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தவேல் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.
சூலூர் காவல் நிலையத்தில் அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 417 - ஏமாற்றுதல், 418 - நம்பியவர்களை ஏமாற்றுதல், 419 - ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், 464 - தவறான ஆவணத்தை உருவாக்குதல், 465 - பொய் ஆவணம் உருவாக்கி ஏமாற்றுதல், 468 - ஏமாற்ற திட்டமிட்டு ஆவணம் உருவாக்குதல், 479 - சொத்து குறீயட்டை தவறாக பயன்படுத்துதல், 481 - தவறான சொத்து குறியீட்டை பயன்படுத்துதல், 482 - சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்தியதற்கு தண்டணை, 485 - சொத்து அடையாளத்தை உருவாக்கும் கருவியை வைத்திருந்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூலூர் காவல் நிலையத்தில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமி தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதன்பின் நேற்று மாலை கே.சி. பழனிச்சாமியை சூலூர் நீதிமன்ற நீதிபதி வேடியப்பன் இல்லத்திற்கு காவல் துறையினர் அழைத்து வந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேடியப்பன், கே.சி. பழனிச்சாமியை வருகின்ற ஏழாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் சிவகுமார், ‘நீதிபதி கே.சி. பழனிச்சாமியை வருகின்ற ஏழாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தார். அவரை வெளியே எடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.
அதன்பின் பேசிய புகார்தாரரின் வழக்கறிஞர் மாதவன், பழனிச்சாமி மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக பெயரில் போலி இணையதளம்: முன்னாள் எம்.பி. அதிரடி கைது!