கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உள்பட்ட மங்கலபாளையம் வனச்சரகத்தை ஒட்டியுள்ள தனியார் தோட்டத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கரடி ஒன்று படுத்துக் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் மதுக்கரை வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் வனத்துறை மருத்துவர் சுகுமார் வரவழைக்கப்பட்டு கரடியின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது.
அப்போது கரடியின் உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டு, அதில் புழுக்கள் உற்பத்தியான நிலையில், உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அக்கரடி படுத்து கிடந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி கூண்டில் ஏற்றிய வனத்துறையினர், சாடிவயல் யானைகள் முகாமிற்கு அதனைக் கொண்டு வந்தனர். தொடர்ந்து, முதல்கட்டமாக கரடியின் உடலிலிருந்த காயங்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கரடியை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை மருத்துவர் சுகுமார் கூறுகையில், ''15 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் படுத்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்தக் கரடிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு கூண்டில் ஏற்றப்பட்டு சாடிவயல் யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் கரடியின் உடலை ஆய்வு செய்ததில், அதன் முதுகுப் பகுதியில் பெரிய காயம் ஏற்பட்டிருந்ததும், அதில் புழுக்கள் உற்பத்தியானால் கரடி நடக்க முடியாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த கரடிக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளை (அக்.23) காலை மீண்டும் மருத்துவ சிகிச்சை தொடரும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபாவளி ஷாப்பிங் செல்ல 50 சிறப்பு பேருந்துகள்!