கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டுவருகிறது. கல்லாறு முதல் குன்னூர் வரை சுமார் 12 கி.மீ. அடர் வனத்தில் பயணிக்கும் இம்மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் தாங்கள் கொண்டுசெல்லும் நெகிழிக் குப்பைகளை வனத்தினுள் வீசிவிடுகின்றனர்.
இதன் காரணமாக அந்தக் கழிவுகளை வன உயிரினங்களான காட்டு யானை, மான், குரங்கு உள்ளிட்டவை உண்ணுவதால் உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதனைத் தடுக்க மேட்டுப்பாளையம் வனத் துறையினர், ரயில்வே துறையினர் இணைந்து நெகிழிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் வனத் துறை, ரயில்வே ஊழியர்கள் இணைந்து கல்லாறு ரயில் நிலையத்திலிருந்து ஒரு குழுவும், அதேபோல் ஹில்குரோவ் ரயில் நிலையத்திலிருந்து ஒரு குழு என மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட உதவி வனப்பாதுகாலர் தினேஷ் குமார், மேட்டுப்பாளையம் வனச்சரகர் பழனிராஜா தலைமையில் கோவை வேளாண் கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் வனச்சரக அலுவலர்களும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
அடர்ந்த வனத்தில் சுமார் 8 கி.மீ. தொலைவிற்கு நடந்தே சென்று அங்குச் சிதறிக்கிடந்த நெகிழிக் கழிவுகளைச் சேகரித்து எடுத்துவந்து வனத்தைத் தூய்மைப்படுத்தினர்.
இதையும் படிங்க: Viral Video: ஓட்டுநரை அச்சுறுத்தும் சிறுத்தை!