கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதம் முழுவதும் கோவை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது. கடந்த சில வாரங்களாக மழை குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
கோவை மாநகரப் பகுதிகளில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. காந்திபுரம், ரயில் நிலையம், டவுன்ஹால், கணபதி, பீளமேடு, லட்சுமி மில், ராமநாதபுரம், சிங்காநல்லூர், வெள்ளலூர், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதில் கிருஷ்ணசாமி நகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். அப்பகுதி முழுவதும் உடனடியாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வெள்ள நீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. மேலும் மழை காரணமாக கோவை மாநகரப் பகுதிகளில் பல்வேறு சாலைகள் சேதமடைந்து சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் இரயில்வே மேம்பாலத்தின் அடியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதேபோல உப்பிலிபாளையம் அவிநாசி சாலை மேம்பாலத்தில் இரயில்வே பாலத்தின் அடியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கோவை மாநகராட்சி ஊழியர்கள் பாலத்தின் அடியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், நேரில் ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சொந்தக்கட்சியின் அதிகாரப்போட்டியை மறைக்க திமுகவை விமர்சிக்கின்றனர்... முதலமைச்சர் ஸ்டாலின்