மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் கரைபுரண்டு செல்கிறது. இதனால் சித்திரைச்சாவடி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக கோவையில் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் சுமார் மூன்று அடி வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சித்திரைச்சாவடி தடுப்பணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஒரு சில இளைஞர்கள் அங்கு விபரீதம் தெரியாமல் கூடி பொழுதைக் கழித்து வருவது, பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெள்ளமானது எப்பொழுது வேண்டுமானாலும் அதிகரிக்கக் கூடுமென்றும் கூறப்படுகிறது.