கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கருணாகரன் (42). இவர் நேற்றிரவு (செப்.18) தனது இருசக்கர சைக்கிளில் தெலுங்குபாளையம் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அவரைப் பின்தொடர்ந்து வந்த மூன்று இளைஞர்கள் கருணாகரனிடமிருந்த செல்போனை பறித்துவிட்டு தப்ப முயன்றுள்ளனர்.
இதையடுத்து கருணாகரனின் சத்தம்கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள், தப்ப முயன்ற கொள்ளையர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்துள்ளனர். மேலும் இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து, பிடிபட்ட நபரை செல்வபுரம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
பின்னர் கருணாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிடிபட்ட நபரிடம் விசாரணை மெற்கொண்டனர். விசாரணையில், அந்நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (23) என்பதும், கோவை மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும் தப்பியோடிய இருவர், அவரது நண்பர்களான சஞ்சை, சன்பர்குமன் என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதேபோன்று கோவை மாவட்டம் சூலூர் அருகேவுள்ள பாப்பம்பட்டி பிரிவில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர் கந்தசாமி என்பவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளான நிலையில், அவர்களை துரத்திவந்த கந்தசாமி இருவரையும் பிடித்து அருகிலிருந்தவர்களின் உதவியோடு கட்டிவைத்து அடித்துள்ளார்.
தொடர்ந்து அவர்களை சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஹாசிக் அலி, ஹனீஸ் என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை!