கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் முத்து(67). இவர் அதே பகுதியில் தோட்டம் வாங்கி ரிசார்ட் நடத்திவந்தார். இதனிடையே வயது மூப்பின் காரணமாக 2017ஆம் ஆண்டு ரிசார்ட்டை விற்க முத்து முயற்சி செய்து, கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி திண்டுக்கல்லைச் சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கு 4 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தார்.
அதில் 3 கோடியே 36 லட்சம் ரூபாய் சிங்காநல்லூர் கிளை வங்கியில் செலுத்தப்பட்டது. அதில் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாயை கடந்த 2ஆம் தேதி அவரது ரிசார்ட்டிற்கு ஒரு வருட காலமாக வந்துபோகும் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த அனுப் குமார் என்பவருடன் வங்கியில் இருந்து எடுத்துள்ளார்.
அப்போது வீட்டிற்கு திரும்புகையில் முத்துவிடம் அனுப் குமார் இரவு நேரமாகிவிட்டதால் உங்களுடைய ஒரு கோடியே 35 லட்சம் பணத்தை காலையில் கொண்டுவந்து கொடுப்பதாக கூறிவிட்டு, முத்துவை ரிசார்ட்டில் இறக்கி விட்டார். மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் அனுப் குமார் உள்ளிட்டோர் வராததால் அனுப் குமார், டிரைவர் சதீஷ் ஆகியோர் மீது ஆனைமலை காவலர்களிடம் முத்து புகார் செய்தார்.
இவர்கள் மீது ஆனைமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதையடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் ரா. அருளரசு உத்திரவின் படி வால்பாறை துணை கண்காணிப்பாளர் விவோகனந்தன் தலைமையில் ஆய்வாளர் சுப்பிரமணி மேற்பார்வையில் மூன்று தனிப்படையினர் கேரளா உள்ளிட்ட இடங்களில் விசாரனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கேரளா - தமிழ்நாடு எல்லையான மீனாட்சிபுரம் பகுதியில் வாகன சோதனை செய்தபோது காரில் வந்த கேரளா இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகத்தின் பேரில் அவர்கள் ஆனைமலை காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் தனியார் ரிசார்ட் உரிமையாளரிடம் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவத்தில் ஈடுபட்டது இவர்கள் தான் என தெரிய வந்தது. இது தொடர்பாக கார் டிரைவர் சதீஸ், ஜிம்சித், மனோஜ், பிலால், சசிகாந்த் ஆகிய ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து துப்பாக்கி, கார், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய குற்றவாளியான அனுப் குமாரை தனிப்படை காவலர்கள் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: போலி நகைகளை வைத்து ரூ.1 கோடி மோசடி - யூனியன் வங்கி நகை மதிப்பீட்டாளருக்கு போலீஸ் வலைவீச்சு!